நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி பற்றி - வைரமுத்து !


நடைப்பயிற்சிக்குப் பெரிதும் உகந்த நேரம் காலைதான். அது ஓசோன் நிறையும் நேரம்; அதிக ஆக்சிஜன் கிடைக்கும் நேரம். படுக்கையில் அசைவற்றுக் கிடந்த உங்கள் மூட்டுகள் விறைத்திருக்கும். காலை நேர நடைப்பயிற்சியால் மூட்டுகள் முடிச்சவிழும்.

அடுத்த வீட்டு நண்பரை அழைத்துக் கொண்டு அடுத்த தெருவில் காப்பி சாப்பிட்டு ஒரு மணி நேரத்தில் வீடுவந்து சேர்வதே நடைப்பயிற்சி என்று பலர் நம்புகிறார்கள்; தவறு. நடைப்பயிற்சியில் முக்கியமானது நேரமல்ல; தூரம். குறைந்த நேரத்தில் அதிக தூரம் நடப்பது நல்ல பயிற்சி. பூமிக்கு வலிக்குமென்று பொடிநடை போவதெல்லாம் ஒரு நடையா? கைவீசி நடக்க வேண்டும்; காற்று கிழிபடும் ஓசை கேட்க வேண்டும்.

63 தசைகள் இயங்கினால் தான் நீங்கள் நன்றாய் நடந்ததாய் அர்த்தம்.நடைப்பயிற்சியின் போதே லாகவமாய்ச் சுழற்றிக் கழுத்துக்கு ஒரு பயிற்சி தரலாம். தோள்களை மெல்ல மெல்ல உயர்த்திக் காதுகளின் அடிமடல் தொடலாம். விரல்களை விரித்து விரித்துக் குவிக்கலாம். நடைப்பயிற்சியில் பேசாதீர்கள். உங்கள் ஆக்சிஜனை நுரையீரல் மட்டுமே செலவழிக்கட்டும்.

ஒருபோதும் உண்டுவிட்டு நடக்காதீர்கள். சாப்பிட்டவுடன் உடம்பின் ரத்தமெல்லாம் இரைப்பைக்குச் செல்ல வேண்டும்; இரைப்பையின் ரத்தத்தைத் தசைகளுக்கு மடைமாற்றம் செய்யாதீர்கள். உங்கள் விலாச் சரிவுகளில் திரவ எறும்பு போல் ஊர்ந்து வழியட்டும் வேர்வை. அதை இயற்கைக் காற்றில் மட்டுமே உலர விடுங்கள். இருக்கும் சக்தியை எரிக்கத்தானே நடந்தீர்கள். எரித்ததற்கு மேல் வழியிலேயே நிரப்பிக் கொண்டு வந்துவிடாதீர்கள்.

இப்படி... சொன்னது வேற யாருங்க..? நம்ப கவிப்பேரரசு வைரமுத்து தான். அவர் எழுதிய ஒரு கவிதை "உடல் எழுத்து". அதில் மேல் சொன்னது போல மிக அழகாக தனக்கே உரிய கவிதை நடையில் அ முதல் ஃ வரை அவர் எழுதியதை உங்களுடன் ....

உடல் எழுத்து
(அ முதல் ஆஹா வரை..!! )

அதிகாலை எழு.
ஆகாயம் தொழு.
இருதயம் துடிக்க விடு.
ஈரழுந்த பல் தேய்.
உடல் வேர்வை கழி.
ஊளைச்சதை ஒழி.
எருதுபோல் உழை.
ஏழைபோல் உண்.
ஐம்புலன் பேணு.
ஒழித்துவிடு புகை & மதுவை.
ஓட்டம் போல் நட.
ஒளதடம் பசி.
அஃதாற்றின் எஃகாவாய்.