பிரசவ லேகியம்

பிரசவ லேகியம்!

பிரசவித்த பெண்களின் உடலானது பழைய நிலைக்கு திரும்பும்போது வலியும், வேதனையும் ஏற்படும். இந்த வலி தொடர்ந்து இருப்பதில்லை. விட்டு விட்டு வரும். குழந்தை பிறந்து மூன்று மணி நேரத்திற்குள் பால் கொடுத்து விட்டால் இந்த வலி குறையும் . ஒரு சிலருக்கு குறையாது, வலியும் தாங்க முடியாததாக இருக்கும். கருப்பையில் ரணம் ஏற்பட்டு வலி அதிகரிக்கும். கருப்பை ரணத்தை ஆற்றவும், வலிகளைப் போக்கவும் பிரசவித்த பெண்களுக்கு நாட்டு மருந்துகளை கசாயம் செய்தும், லேகியம் போல செய்தும் சாப்பிடக் கொடுப்பார்கள்.
பிரசவ லேகியம்

சுக்கு, மிளகு, திப்பிலி, ஆலரிசி, லவங்கப்பத்திரி, லவங்கப்பட்டை இவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து லேசாக வறுத்து இடித்து தூளாக்கி சலித்து வைத்துக் கொண்ட சூரணத்தில் இரண்டு ஸ்பூன் அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை கொடுத்தால் போதும். அடி வயிறு வலி குணமாகும்.
வில்வ இலைச் சாறு
குழந்தை பிறந்த பின்னர் கருப்பையில் ரணம் ஏற்பட்டு, அதனால் இரத்தப்பெருக்கு ஏற்படுவதும் உண்டு. அச்சமயத்தில் வில்வ இலையுடன் வெங்காயம் சேர்த்து இடித்துப் பிழிந்த சாற்றில் அதே அளவு விளக்கெண்ணையும் சேர்த்து, காய்ச்சி வடித்து அத்தைலத்தில் ஒரு ஸ்பூன் வீதம் ஒரு வாரம் தொடர்ந்து கொடுத்து வர, ரணம் ஆறும். இரத்தப் போக்கும் நிற்கும். மஞ்சள் தூளுடன் இஞ்சிச்சாறு சம அளவு எடுத்து பால் அல்லது காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து பருக வலி குறையும்.
கடுகுப் பொடி
சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படும் கடுகு பிரசவித்த பெண்களுக்கு அருமருந்தாக செயல்படுகிறது. வாணலியில் கடுகை போட்டு லேசாக வறுத்து அதனை பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். சாப்பிடும் போது சோறுடன் கடுகுப்பொடி, நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட கருப்பை புண்கள் ஆறும், வலி குறையும்.
கொடாம்புளி ரசம்
குழந்தை பேற்றுக்குப்பின்னர் புளி, காரம் அதிகம் சாப்பிடுவது தாய்மார்களுக்கு ஏற்றதல்ல. எனவே வெள்ளைப்பூண்டு அதிகம் சேர்த்த பத்திய உணவும், கொடாம்புளி, மிளகு சேர்த்த ரசமும் உணவில் சேர்த்து கொடுப்பார்கள். இது வயிற்று வலிக்கு இதம் தரும்.

======================================

பிரசவ லேகியம் -2 .
. .

தேவையான பொருட்கள்:-

வசம்பு., திப்பிலி, வாய்விளங்கம், தேசாவரம், (கண்டந்திப்பிலி,) சுக்கு,மிளகு, ஜீரகம், சோம்பு, பறங்கிப்பட்டை, ஜாதிபத்திரி, பெரிய ஏலக்காய், சின்ன ஏலக்காய், அதி மதுரம், அதி விடையம், சடவஞ்சி, தாளிசிபத்திரி, வால்மிளகு, லவங்கப்பட்டை, லவங்கம் என்னும் கிராம்பு, சிறுநாகப்பூ, காட்டாதிப்பு, ஜாதிக்காய், அரத்தை, சித்தரத்தை, தனியா, மலைதாங்கி, கருஞ்சீரகம், நஞ்சுவிதை, கோஷ்டம், அக்ரகாரம், வில்வவேர், நருக்கு மூலம், கூகைநீர், ஓமம், செவியம்,

இஞ்சி நூறு கிராம், தேன் நூறு கிராம் , கால் கிலோ கருப்பட்டி, நெய் கால் கிலோ, நல்லெண்ணெய் நூறு கிராம்

மேற்சொன்ன சாமான்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். பத்து கிராமுக்குக் குறையாமலும், இருபத்தைந்து கிராமுக்கு மிகாமலும் மேற்கண்ட சாமான்களை வாங்கிக்கொள்ளவும். பின்னர் சுத்தம் செய்து வெயிலில் காய வைக்கவும். வெறும் வாணலியில் ஒவ்வொன்றாய்ப் போட்டு வறுக்கவும். வறுத்த சாமான்களை மிக்சியில் அல்லது இயந்திரத்தில் பொடி செய்து கொள்ளவும். சுமார் முக்கால் கிலோ வரை பொடி வரும். கால் கிலோ கருப்பட்டியைத் தூள் செய்து சுத்தமான நீரில் போட்டு அழுக்கு, கல் நீக்கி வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இஞ்சி நூறு கிராம் வாங்கித் தோல் நீக்கித் துருவி அரைத்துக்கொண்டு சாறு எடுக்கவும். சாறை ஒரு இரும்புச் சட்டியில் ஊற்றிக் கொதிக்க விடவும். கொதிக்கையிலே கொஞ்சம் கொஞ்சமாய்க் கருப்பட்டி நீரையும் சேர்க்கவும். இரண்டும் நன்கு கொதிக்கையிலே மேற்சொன்ன மருந்துப் பொடியில் பாதி அளவு எடுத்துக்கொண்டு கொதிக்கும் கலவையில் ஒரு கையால் கிளறிக்கொண்டே இன்னொரு கையால் மருந்துப் பொடியைத் தூவவும். நன்கு கெட்டியாக வருகையில் பொடியை நிறுத்திவிடவும். கொஞ்சம் நெய், நல்லெண்ணெய் எனச் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு உருட்டும் பதத்துக்கு வந்ததும் மிச்சம் இருக்கும் நெய்யையும், நல்லெண்ணையையும் விட்டுக் கிளறிக் கீழே இறக்கி ஆறவிடவும். நன்கு ஆறியதும் தேனை விட்டுக் கலந்து ஒரு சுத்தமான பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

சாப்பிடும் முறை:-

காலை வெறும் வயிற்றில் கொடுத்தல் நன்மை பயக்கும். ஆனால் தற்போதைய ஆங்கில மருத்துவம் இந்த மருந்துகளை அறவே தடுப்பதால் காலைக் காப்பியின் போது ஒரு டேபிள் ஸ்பூன் இந்த லேகியம் கொடுத்த பின்னர் காலைக்காப்பியைச் சாப்பிட வைக்கலாம். தினமும் இருவேளை எடுத்துக்கொள்ளலாம். அஜீர்ணம், வாயு சேர்தல், பித்தம், ருசியின்மை போன்றவை குறைந்து பிரசவம் ஆன பெண் நன்கு ஆரோக்கியமாக உணவு எடுக்க முடிவதோடு குழந்தைக்குப்பாலும் சுரக்கும். மேற்சொன்ன அளவுப் பொடியை மூன்று மாதங்களுக்குப்பயன்படுத்தலாம். அதன் பிறகும் தேவை எனில் சாமான்கள் வாங்கி மருந்துப் பொடி தயாரித்துக்கொண்டு பயன்படுத்தலாம். குழந்தை பிறந்த ஒருவருடமும் முன் காலங்களில் சாப்பிட்டு வந்தார்கள்.