மோர் - சத்தான பானம்

 மோர் - சத்தான பானம்

கோடைகாலம் வந்தாலே விதம் விதமாக குளிர்பான விளம்பரங்கள்


தொடர்ந்து இடம்பெறும் ஆனால் உண்மையான இயற்கை குளிர்பானத்தை நாம் மறந்து விடுகிறோம். ஏழைகளின் சக்தி என்று கருதப்படுவது, நீராகாரம். முதல் நாள் வடித்த சோற்றில் தண்ணீரை ஊற்றி வைத்து அதை மறுநாள் தண்ணீருடன் சேர்த்து சாப்பிடுவது தான் நீராகாரம்.

அதில் உள்ள சத்துக்களை எந்த நவீன மருந்தும் தர முடியாது. அதே போன்று மற்றொரு சத்தான பானம், மோர், பாலை ஊற்றுவதன் மூலம் கிடைப்பது தயிர். இந்த தயிரை மத்து கொண்டு கடைந்து வெண்ணெய் சத்தை பிரித்து எடுத்துவிடவேண்டும்.

கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைத்தபின் மோர் கிடைக்கும் இதனுடன், கறிவேப்பிலை, மல்லிதழை, இஞ்சி, பச்சை மிளகாய், போன்றவற்றை பொடிப்பொடியாக நறுக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்க வேண்டும். இப்போது சுவையான மோர் தயார். மோரில் பொட்டசியம், வைட்டமின் பி12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரம் சத்துக்கள் நிறைந்துள்ளன. புளிப்பு, உப்பு, காரம், உவர்ப்பு என நான்கு சுவைகளையும் மோர் தரக்கூடியது. நீர் மோர் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது.

பசியின்றி வயிறு திம்மென்று இருக்கும்போது இஞ்சி கலந்த இந்த நீர்மோர் ஒரு டம்ளர் பருக அரைமணி நேரத்தில் நல்ல பசி எடுப்பதை உணர முடியும். கொளுத்தும் வெயிலில் சுற்றிவந்த பின் உடலில் உள்ள நீர்சத்து முழுமையும் ஆவியாகி விடும்.

அப்போது ஒரு டம்ளர் மோர் குடித்துப்பாருங்கள். உடலில் புத்துணர்ச்சி ஏற்படுவதை நன்றாக உணர முடியும். இது எந்த குளிர்பானத்திலும் கிடைக்காத ஒன்று, வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து ப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம்.

உடல் சூட்டை தணிக்கும். கோடைகாலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்து விடும். அதற்கு தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும் வரை மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும். குளிர்பானங்களில் சேர்க்கப்படும் செயற்கை சமாச்சாரங்கள் எதுவும் இன்றி கிடைக்கும் மோர் அருந்தி இயற்கையோடு வாழ்வோம்.