நாயுருவி - சிறுநீர் சிக்கல்களுக்கு..செலவில்லாதத் தீர்வு...!

நாயுருவி
சிறுநீர் சிக்கல்களுக்கு..செலவில்லாதத் தீர்வு...!

வீதியெங்கும் நாதியற்றுக் கிடக்கும் நாயுருவி பற்றி அறிந்து கொள்வோம்...

கடுமையான பாறையையும் தனது மெல்லிய வேரால் துளைக்கும் இயற்கை அதிசயம் கொண்ட மூலிகை நாயுருவி. இப்படி மலைப்பாறைகளில் துளையிட்டு வளர்வதால், இதற்கு 'கல்லுருவி’ என்ற பெயரும் உண்டு. தரிசு நிலங்கள், வேலியோரங்கள், காடு, மலைகள் என அனைத்துப் பகுதிகளிலும் தானே வளரும் நாயுருவி... முட்டை வடிவ இலைகளைக் கொண்டிருக்கும். நெற்கதிர் போல் நீண்டிருக்கும் கிளைகளில், அரிசி போன்ற முட்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். இந்தச் செடியின் அருகில் செல்லும் விலங்குகள், மனிதர்களின் உடல் மற்றும் உடைகளில் ஒட்டிக் கொள்ளும் இதன் விதைகள், வெவ்வேறு இடங்களில் விழுந்து பரவுகின்றன.

இயற்கைப் பற்பசை..!

'உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?, எலுமிச்சை இருக்கா?’ என்று கேட்டு பல பற் பசை நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. இந்த பற்பசைகளுக்கெல்லாம் முன்னோடி, நாயுருவிதான். முற்காலத்தில் மனிதர்கள், பற்பசை மற்றும் பல்துலக்கியாக நாயுருவி வேரைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த வேரால் பல் துலக்கினால், பற்கள் கறைகள் நீங்கி வெண்மையாவதுடன், பாக்டீரியா போன்ற கிருமிகளும் ஒழிந்துவிடும். கடுமையான பல்வலி இருப்பவர்கள்... மிருதுவான நாயுருவி வேருடன், சிறிது கடுகு எண்ணெய், சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கினால், வலி பறந்தோடி விடும்.

'தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) இதில் பல் துலக்கினால்... முகம் பிரகாசமடையும். பேச்சு தெளிவாகும். எதிர்மறை எண்ணங்கள் மனதில் இருந்து அகலும். ஆனால், இந்த நாட்களில் டீ, காபி, புகை, புலால் கூடாது என்கிறது’ சித்த மருத்துவம்.

யானை பலம் கிடைக்கும்!

நாயுருவி அரிசிக்கு பசியைப் போக்கும் அபாரமான ஆற்றல் இருக்கிறது. இதன் அரிசியை சமைத்து உண்டு வந்தால், பசியே எடுக்காது. ஒரு வாரம் ஆனாலும், உடல் சோர்வின்றி சுறுசுறுப்பாக இருக்கும். அத்துடன் உடம்பு இரும்பு போல உறுதியாகும். 50 கிராம் நாயுருவி அரிசியை உண்டால், இரண்டுவேளை பசியைத் தாங்கலாம். இந்தச் சோற்றை உண்டு பசியே எடுக்காவிட்டால், மிளகு, சீரகம் இரண்டையும் வறுத்து தண்ணீரில் காய்ச்சிக் குடித்தால் பசியெடுக்கும். மூங்கிலரிசி, தினையரிசி, நாயுருவி அரிசி ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து, ஒன்றாக அரைத்துப் பொடியாக்கி, அதில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, கஞ்சி போல செய்து தினமும் உண்டு வந்தால்... யானை பலத்தையொத்த அபார உடல் திறனும், வனப்பும் கிடைக்கும்.

அட்டகர்ம மூலிகை!

காடுகளில் சுற்றித் திரியும் சித்தர்கள், இதன் வேர்களில் பல் துலக்கி, இதன் அரிசியை உண்டு பல நாட்கள் பசியில்லாமல் திரிவார்கள் என்பதால்... இதற்கு 'மாமுனி’ என்ற ஒரு பெயரும் இருக்கிறது. மூலிகைகளில் பெண் தன்மையும், தெய்விகத் தன்மையும், புதன் கிரகத்தின் அம்சமும் கொண்ட இதனை 'அட்டகர்ம மூலிகை’ எனக் கொண் டாடுகிறார்கள், சித்தர்கள். நாயுருவியில் ஆண், பெண் இரண்டும் உண்டு. பச்சை நிற இலை, தண்டுகளை உடையது, ஆண் நாயுருவி எனவும்; சிவப்பு நிறத் தண்டு, பாகங்களைக் கொண்டது பெண் நாயுருவி எனவும் அழைக்கப்படுகிறது. இதை 'செந்நாயுருவி’ என்றும் அழைப்பார்கள். இந்த செந்நாயுருவியில்தான் மருத்துவ குணங் கள் அதிகம்.

மனநோய்க்கு மருந்து!

''இதன் வேர் மிகவும் வசியத்துவம் மிக்கது. நமது முன்னோர்கள், நாயுருவி வேரை வசிய மை தயாரிக்க, பயன்படுத்தி வந்துள்ளனர். இதன் வேரை பால் விட்டு அவித்து, உலர்த்திப் பொடியாக்கி... தினமும் இரண்டு கிராம் அளவு பசும்பாலில் கலந்து சாப்பிட்டு வர, மனநோய்கள், தூக்கமின்மை, படபடப்பு, சித்த பிரமை குறைபாடுகள் நீங்கும்'' என்கிறார்கள், சித்த மருத்துவர்கள்.

கண்ணாடியைக் கடிக்கலாம்!

100 கிராம் நாயுருவி இலையை, 500 மில்லி தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சி, கொதிக்க வைத்து இறக்கி ஆற வைத்து... எண்ணெயில் உள்ள இலைகளை எடுத்து விழுதாக அரைத்து, மீண்டும் எண்ணெயில் கலந்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை ஆறாதப் புண்கள், வெட்டுக் காயங்கள், சீழ்வடியும் புண்களின் மீது பூசி வந்தால்... உடனடி பலன் கிடைக்கும். இதன் இலைக்கு கண்ணாடியை அறுக்கும் தன்மையும் உண்டு. சித்துவேலைகள் செய்பவர்கள், இதன் இலையை மென்று விழுங்கி, தாடையில் கொஞ்சத்தை அடக்கிக் கொண்டு, கண்ணாடிகளைக் கடித்து துப்புவார்கள். ஆனால், இதைச் செய்ய முறையான பயிற்சி வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

சிறுநீர் பிரச்னைக்கான தீர்வு!

சிறுநீர் சிக்கலுக்கும் செலவில்லாதத் தீர்வு நாயுருவி. கதிர்விடாத இளம்செடியின் இலையை இடித்து சம அளவு நீர் கலந்து காய்ச்சி... 3 மில்லி அளவு தினமும் மூன்றுவேளை குடித்து, அத்துடன் பால் அருந்தி வந்தால் தடைபட்ட சிறுநீர் பிரியும். சிறுநீரகம் சிறப்பாகச் செயல்படும். நாயுருவி இலை, காராமணி இரண்டையும் சம அளவு எடுத்து மையாக அரைத்து, நீர்கட்டுள்ளவர்களுக்கு தொப்புள் மீது பற்று போட்டால்... நீர்கட்டு நீங்கும். இதன் இலையைப் பருப்புடன் சேர்த்து, சமைத்து வாரம் இரு முறை சாப்பிட்டால்... நுரையீரலிலுள்ள சளி வெளியேறும். இருமல் குறையும். இலையுடன், சம அளவு துளசி இலை சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு, தினமும் இருவேளை கொடுத்து வந்தால், வண்டு, பூச்சிக்கடி குணமாகும்'' என நாயுருவியைக் கொண்டாடு கிறது, சித்த மருத்துவம்.

மலச்சிக்கல், செரியாமை, பால்வினை நோய்கள், தோல் அரிப்பு, மூலம், தொழுநோய்... என மனித குலத்தின் நோய்களைச் செலவில்லாமல் விரட்டும் மருந்துக்கடையான நாயுருவி, அனைவரின் இல்லங்களிலும் இருக்கவேண்டிய ஒன்று.