கொத்தமல்லி.

கொத்தமல்லி..!

கொத்தமல்லியோட விதைக்கு, 'தனியா'னும் ஒரு பேரு உண்டு. ரசம், துவையல், குருமா, சாம்பார்... இப்படி எதைச் செய்தாலும், அதுல நாலு கொத்தமல்லி தழையை கிள்ளிப் போடறதுதான் இப்ப வழக்கமா இருக்கு. இதுக்குக் காரணம்... அதன் மூலமா நமக்குக் கிடைக்கற பலவிதமான பலன்கள்தான். அதேபோல, கொத்தமல்லி விதைகள் மூலமாவும் ஏகப்பட்ட பலன்களை அடைய முடியும்!

உடல் உஷ்ணத்தைக் குறைக்கறதோட... நாக்கு வறண்டு போய் இருந்தா, அதை சரிபண்ணுற தன்மை இந்த விதைகளுக்கு உண்டு. பித்த மயக்கம், நெஞ்செரிச்சல்னு நிறைய பிரச்னைகளை இது சரியாக்கும். ரெண்டு டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை எடுத்து, பொன்வறுவலா வறுத்து பொடியாக்கி, ரெண்டு டம்ளர் தண்ணி விட்டு கொதிக்க வைக்கணும். அது ஒரு டம்ளரா ஆனதும் இறக்கி ஆற வெச்சு, தேன் இல்லைனா சர்க்கரை சேர்த்து குடிச்சு வந்தா... மேலே சொன்ன பிரச்னைகள் எல்லாம் சரியாகறதோட... தலைசுற்றல், வயித்துப்போக்குகூட சட்டுனு நின்னுரும். தூக்கமில்லாம தவிக்கறவங்களுக்கும் இது சரியான தீர்வைக் கொடுக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு கண்கண்ட மருந்துனு சொல்லலாம் இந்த கொத்தமல்லி விதைகளை! அட, ஆமாங்க... கொத்தமல்லி விதை 10 கிராம்... அதே அளவு வெந்தயம் எடுத்து, ரெண்டையும் லேசா பொன்வறுவலா வறுத்து தூளாக்குங்க. இதுல ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, ரெண்டு டம்ளர் தண்ணிவிட்டு ஒரு டம்ளராகுற வரைக்கும் கொதிக்கவிடணும். பிறகு, காலையிலயும் (வெறும் வயித்துல), சாயங்காலமும் குடிச்சு வந்தா... சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள்ள வரும்.

அங்காயப்பொடினு கேள்விப்பட்டிருப்பீங்க. அங்காயப்பொடியில கொத்தமல்லி விதை, வேப்பம்பூ, சுண்டைக்காய், மிளகு, சீரகம், சுக்கு, வெல்லம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம், உப்பு எல்லாம் சேரும். இந்த அங்காயப்பொடியை தினமும் சாப்பாட்டுல ஒரு டீஸ்பூன் விட்டு பிசைஞ்சு சாப்பிட்டு வந்தா... உடம்புல உள்ள நிறைய வியாதிகள் துண்டைக் காணோம்... துணியைக் காணோம்னு ஓடிப்போயிரும். முக்கியமா சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுல வரும்.