மறந்து போன மருத்துவ உணவுகள்

மறந்து போன மருத்துவ உணவுகள் 1

உணவே மருந்து
மாறிவரும் வாழ்க்கைமுறையும் உணவுப்பழக்கமும் பலவித நோய்களுக்கும் வலியச் சென்று அழைப்பிதழ் நீட்டுகின்றன. 'வாயைக் கட்டி’ வாழ்ந்த நம் முன்னோர் இத்தனை விசித்திரமான வியாதிகளுக்கு ஆளானது இல்லை. நம் முன்னோர் பின்பற்றிய மருத்துவ உணவுகளை... நாம் மறந்துபோன பொக்கிஷங்களை இங்கே விவரிக்கிறார் சித்த உணவியல் நிபுணர் அருண் சின்னையா.

அரைக்கீரைப் பச்சடி
தேவையானவை: அரைக்கீரை - 100 கிராம், கொத்தமல்லி இலை - 100 கிராம், கறிவேப்பிலை - 100 கிராம், புதினா இலை - 100 கிராம், தக்காளி - 4, தேங்காய்த் துருவல் - 50 கிராம், பூண்டு - 6 பல், மிளகாய் - 2, சீரகம் - 5 கிராம், தயிர் - கால் லிட்டர், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: முதலில் அரைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, தக்காளியை மைபோல அரைக்க வேண்டும். பூண்டு, மிளகாய், சீரகத்தை நைசாக அரைத்து, அனைத்தையும் தயிரில் நன்கு கலக்க வேண்டும். இத்துடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து, உப்பு சேர்த்துப் பயன்படுத்த வேண்டும்.
மருத்துவப் பயன்: ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். மலச்சிக்கல் சரியாகும். நினைவாற்றல் பெருகும். கொழுப்பைக் கரைத்து, பித்தத்தைத் தணிக்கும்.
பூசணி இட்லி
தேவையானவை: இட்லி மாவு - 2 கப், அரைத்த வெள்ளைப் பூசணி விழுது - 2 கப், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வெள்ளைப் பூசணியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். தேவைக்கு ஏற்ப சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளவும். இட்லி மாவில் பூசணி விழுதைச் சேர்த்துக் கலக்கவும். கலக்கிய பின், வழக்கம் போல் இட்லி தட்டுக்களில் வார்த்து, வேகவைத்து எடுத்தால் பஞ்சுபோன்ற இட்லி கிடைக்கும்.
மருத்துவப் பயன்: உடம்பில் தேவை இல்லாமல் சேர்ந்திருக்கும் நீரை அகற்றும். பெண்களுக்கு ஏற்படும் அதிகமான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும். உடலில் உள்ள பித்தத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது.
முடக்கத்தான் - கம்பு தோசை
தேவையானவை: கம்பு - ஒரு கிலோ, வெந்தயம் - 50 கிராம், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் - 150 கிராம், பச்சை மிளகாய் - 5, முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கம்புடன் வெந்தயத்தைச் சேர்த்து இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அதனுடன் கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து மாவாக அரைக்க வேண்டும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முடக்கத்தான் கீரையை மாவில் சேர்த்து, உப்பு கலந்து தோசையாக வார்க்க வேண்டும்
மருத்துவப் பயன்: கை கால் மூட்டுகள், இடுப்பு, கழுத்து, நரம்புகளில் ஏற்படும் வலி தீரும்.
உளுந்து சாதம்
தேவையானவை: நிறம் மாறாமல் வறுத்த சம்பா பச்சரிசி - அரை கிலோ, சீரகம், நெய் - சிறிதளவு, உளுந்து - 125 கிராம், தேங்காய்த் துருவல்- 2 மேசைக் கரண்டி, பூண்டு - 25 கிராம், பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி, தண்ணீர் - ஒரு லிட்டர், உப்பு, கறிவேப்பிலை - தேவைக்கேற்ப.
செய்முறை: தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்கவிடவும். கொதித்ததும் அரிசி, உளுந்தை வேகவைக்கவும். பாதி வெந்ததும் தேங்காய்ப்பூ, உப்பு, பூண்டு, பெருங்காயம், சீரகம் சேர்த்து வேகவைக்கவும். நன்றாக வெந்த பிறகு நெய், கறிவேப்பிலை போட்டு அடுப்பில் இருந்து இறக்கிவிட வேண்டும்.
மருத்துவப் பயன்: கை கால் வலி, அசதி, எலும்பு பலவீனம் ஆகியவற்றைப் போக்கி சுறுசுறுப்பு தரும். மெல்லிய உடல்வாகு கொண்டவர்களுக்கு ஊட்டமான உணவு.