பிறந்தவுடன் குழந்தையைப் பராமரிக்கும் முறைகள்

பிறந்தவுடன் குழந்தையைப் பராமரிக்கும் முறைகள்!

பிறந்த குழந்தை வீறிட்டு அழ வேண்டும். அப்படி அழுமேயானால் அதன் நுரையீரல் ஆரோக்கியமாக உள்ளது என அறியலாம். பிறந்தவுடன் குழந்தை அழவே இல்லை என்றாலும் உடனே நாம் செய்ய வேண்டியது இந்த வர்மபுள்ளியை ஒரு நிமிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருங்கள். குழந்தைகள் அழ ஆரம்பிக்கும். இப்புள்ளி குழந்தையின் கை கட்டை விரல் நக ஓரம் இருக்கும். இது நுரையீரலின் 11-ஆவது புள்ளியுடன் சம்பந்தப்பட்டது.

குழந்தைக்கு சேனை வைப்பார்கள். அது தேனாக இருக்க வேண்டும். சீனிப் பாலாக இருக்கக் கூடாது. ஏன் இதற்கு சேனை என்று பெயர் வந்தது தெரியுமா?

கருவிலுள்ள குழந்தையே கதை கேட்டதாகச் சொல்லப்படும்போது வெளியே வந்த அந்தப் புது உயிருக்குத் தம்மைச் சுற்றிலும் எத்தனை உறவுகள் உள்ளது என அறியும்போதே அதன் மனதில் நம்பிக்கையும் உருவாகுமே. பின் ஆரோக்கியம் என்பது தொடரும் அல்லவா? அந்த நம்பிக்கையை வளர்ப்பதன் பெயர்தான் சேனை.
பின் தாயின் பாலை அறிய வைக்கலாம். எவ்வளவுதான் நாகரிக காலத்தில் நாம் வாழ்ந்தாலும் 16-ஆவது நாளிலிருந்து 48 நாள் வரையிலும் தினமும் ஏதாவது ஒரு மூலிகையை அரை டம்ளர் வெந்நீரில் வேகவைத்து அந்தத் தண்ணீரானது ஒரு சங்கு அளவு வற்றிவிட வேண்டும். (மூலிகை என்பது நம் வீட்டைச் சுற்றியே உள்ளது) இந்தப் பழக்கம் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டவும், உடலில் கழிவுகள் தங்காமலும் பாதுகாக்கும்.

குழந்தையைக் குளிப்பாட்ட கோதுமை மாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பெண் குழந்தையாக இருந்தால் தரமான மஞ்சள் கிழங்கு, பச்சை பயறு, கஸ்தூரி மஞ்சள், மரிக்கொழுந்து, செண்பகப்பூ, ஆவாரம் பூ, காய், நாட்டு ரோஜா இதழ் இவற்றின் கலவை நல்லது.

தாய்ப்பால் ஒரு வருடமாவது கொடுப்பதால் குழந்தைக்கும் தாய்க்குமே நல்லது. தாய்ப்பால் அதிகமாகச் சுரக்க தினமும் 10 கடலைப்பருப்பு, பால் கொழுக்கட்டை, கருப்பட்டி போன்றவற்றை உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும். 6 மாதக் குழந்தைக்கு தோல் உளுந்து, பச்சைப்பயறு, பொரிகடலை, சிவப்பு நிற அவல் இவற்றை நன்கு வறுத்த பின்பு மாவாக்கி அதையும் சலித்துவிட்டு அந்த மாவைக் கருப்பட்டி சேர்த்து காய்ச்சிய கஞ்சியாக அடிக்கடி கொடுக்கலாம். அளவு மிகவும் முக்கியம். கீரை வேக வைத்த தண்ணீர் (அரைக்கீரை) பருப்பு வேக வைத்த தண்ணீர், சீரகம், கறிவேப்பிலை, மல்லி, புதினா ஆகியவற்றின் வேக வைத்த தண்ணீர் குழந்தைக்கு நல்லது. 1 வயது வரையிலும் எளிதில் ஜீரணமாகும் உணவைத் தேர்வு செய்யுங்கள்.

அதேபோல் குழந்தைக்கு உணவைத் திணிப்பதைத் தவிருங்கள். கிண்ணத்தில் உணவு மிச்சமாகக் கூடாது என எண்ணும் நீங்கள் உங்கள் குழந்தையின் வயிறு என்னவாகும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.அதை நீங்கள் அன்பு, பாசம் என்று நினைப்பீர்களேயானால் அது உங்களின் அறியாமையே ஆகும். வருங்கால நிரந்தர நோயாளியை உருவாக்கிக் கொண்டுள்ளீர்கள் என்பதையும் உணருங்கள்.

யாரைக் கேட்டாலும் குழந்தை சாப்பிடவே மாட்டேங்குது என்பது பெற்றோர்களின் புலம்பல். அதன் வயிறுக்குத் தேவையானபோது அது உணவைத் தேடும்.
அதேபோலதான் படிப்பும். நீங்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதை விட்டுவிட்டு எப்படிப் படித்தால் அவர்களுக்குப் புரியும் என்ற வழியை மட்டுமே காண்பியுங்கள். கற்றுக் கொள்ளும் முயற்சியை குழந்தைகள் பார்த்துக் கொள்வார்கள். எல்லா விஷயத்திலேயும் உங்களின் தலையீடு அதிகமானால் குழந்தையின் முயற்சி தடையாகும். எல்லாம் அம்மா பார்த்துக் கொள்வாள் என்ற எண்ணம் உருவாகும்.
உணவை உண்ணவில்லை என்பதற்காக உணவுக்கிடையே அடிக்கிறீர்களே, அது மிகவும் மடைமையான செயல். இடையில் காய்கறி சூப், வாரம் ஒரு நாள் இஞ்சிச் சாறும் தேனும். 6 மாதத்திற்கு ஒருமுறை வயிற்றைச் சுத்தம் செய்வது தொடருமேயானால் வரும் காலமாவது நோயில்லாத தமிழ்நாடாக மாறும். அதில் உங்களின் பங்களிப்பு இருக்கட்டுமே.

இப்போது கருப்பையை வெட்டி எடுப்பது மிகவும் சாதாரணமான விஷயமாகிவிட்டது. கேட்டால் வயிற்றில் கட்டி அல்லது அதிகமான தீட்டு வெளியேற்றம் என்று பல காரணம். நான் ஒன்று கேட்கலாமா? வயிற்றில் கட்டி இருந்தால் வெட்டி எடுத்துவிடலாம். கண்ணில் கட்டி வந்தால் என்ன செய்யலாம்? வெட்டி எடுத்துவிடலாமா? இதுவரையிலும் கருப்பை செய்து கொண்டிருந்த வேலையை இனி யார் செய்வது?
மாற்று முறை மருத்துவத்தில் எவ்வளவோ இருக்கிறது. கற்றுக் கொள்ளுங்கள்.