உங்கள் உடலின் விலை என்ன?

உங்கள் உடலின் விலை என்ன?

ஒவ்வொரு ஆண்டும் ‘உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது' என்கிற செய்திகள் வரும். அப்போதெல்லாம் அந்த உறுப்புகள் எல்லாம், யார் மூலம், யாரிடமிருந்து, எப்படி, எவ்வாறு, எவ்வளவு ரூபாய்க்கு வாங்கப்பட்டன, முறைப்படி அவை வாங்கப்பட்டனவா என்பது உள்ளிட்ட கேள்விகளை யாரும் எழுப்புவதில்லை. குறைந்தபட்சம், இன்னாருக்கு இன்னார் தானம் கொடுத்தார் என்ற தகவலையாவது மருத்துவமனைகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனவா? இல்லை.

நீங்கள் என்ன விலைக்குப் போக லாயக்கு?

‘சற்றேறக்குறைய இருநூறு பவுண்டுகளுக்குக் கீழே. எடை, பழுப்பு நிற முடி, நீலக் கண்கள், நல்ல பற்கள். என்னுடைய தைராய்டு சுரப்பிகள், ரத்த நாளங்கள் சரியாக இயங்குகின்றன. ஆறடி உயரம், முறையாக இணைக்கப்பட்ட திசுக்கள். எனது சிறுநீரகங்களும், இதயமும் சீரான முறையில் இயங்குகின்றன. அநேகமாக நான் 2,50,000 டாலர்களுக்கு (சுமார் ரூ.1 கோடியே 50 லட்சம்) மதிப்புடையவன் ஆகிறேன். நான் அமெரிக்கனாக இருப்பதால், எனக்கு இன்னும் கொஞ்சம் அதிக விலை கிடைக்கலாம்'.

இப்படித்தான் தொடங்குகிறது ‘சிவப்புப் புத்தகம்' (தி ரெட் மார்க்கெட்) எனும் புத்தகம். உலகம் முழுவதும் நடைபெறும் மனித உடல் உறுப்பு கடத்தல், வியாபாரம் குறித்து ஆழமாக ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகம். எழுதியவர் ஸ்காட் கார்னி எனும் புலனாய்வுப் பத்திரிகையாளர்.

கிட்னிவாக்கம் தெரியுமா?

அமெரிக்காவில் மானுடவியல் படித்துவிட்டுப் பேராசிரியராகப் பணிபுரிய 2006-ம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்தார் ஸ்காட். அப்போது அவருடைய மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவரின் இறப்பு ஸ்காட் கார்னிக்கு வேறு ஒரு உலகத்தைத் திறந்து காட்டியது. அதனுள் நுழைந்தபோதுதான், உலகில் நடைபெறும் உடல் உறுப்பு தானங்களுக்குப் பின் உள்ள கறுப்புப் பக்கங்கள் அவருக்குத் தெரியவந்தன. அதை ஆவணப்படுத்தும் முயற்சிதான் இந்தப் புத்தகம்.

இந்தியாவில் இருந்த காலத்தில் 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டுவரை சென்னையிலும் அவர் இருந்திருக்கிறார். அப்போது ‘சுனாமி நகர்' எனும் பகுதியில் வறுமையில் வாழ்ந்துவந்த பலர் தங்களின் ‘கிட்னி'யை விற்றுப் பிழைப்பு நடத்தினர். இதனால் அந்தப் பகுதி ‘கிட்னிவாக்கம்' என்று கிண்டலாக அழைக்கப்பட்டது. அந்தப் பிரச்சினையும் இந்தப் புத்தகத்தில் பதிவாகியிருக்கிறது.

வியாபாரத்திலிருந்து சேவைக்கு

1901-ம் ஆண்டு கார்ல் லேண்ட்ஸ்டீனர் என்பவர் ரத்தப் பிரிவுகளைக் கண்டுபிடித்தார். இதன் காரணமாக, முதல் உலகப் போரின்போது காயமடைந்த வீரர்களுக்கு மற்றவர்களுடைய ரத்தம் செலுத்தப்பட்டு, பிழைக்க வைக்கப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின்போது ரத்த வங்கிகள் வந்துவிட்டன. ஆனால், அந்தக் காலத்தில் ரத்த வங்கித் தொழில், பணம் கொழிக்கும் தொழிலாக மாறியது.

1970-ம் ஆண்டு ரிச்சர்ட் டிட்மஸ் எனும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்தான் ‘ரத்த தானம்' என்கிற சிந்தனையை முதன்முதலில் முன்வைத்தார். அதன் அடுத்த கட்டமாக 1984-ம் ஆண்டு அமெரிக்கச் செனட்டில் ‘மனித உடல் உறுப்புகளை வெறுமனே உதிரி பாகங்களாகப் பார்க்கக் கூடாது' என்று அறிவிக்கப்பட்டது. இந்த மாபெரும் அறிவிப்புக்குப் பின்னால் இருந்தவர் யார் தெரியுமா? புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்து உலகில் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்தி அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்று அமெரிக்க முன்னாள் துணை அதிபராகவும் பதவி வகித்த அல் கோர்.

மருத்துவச் சுற்றுலா ரகசியம்

இன்றைக்கு உலகின் பெரும்பாலான நாடுகளில் ‘உடல் உறுப்பு தானம்' சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் சிறுநீரகங்கள் உள்ளிட்ட உறுப்புகளைச் சட்டப்பூர்வமாக இன்னொருவருக்குப் பொருத்த, மிகுந்த செலவாகும். மேலும் காத்திருப்புப் பட்டியலின்படிதான் உறுப்பு பொருத்தப்படும். உங்களின் சுற்று வருவதற்குள் நோய் முற்றிப்போய், இறந்துபோகக்கூட வாய்ப்பிருக்கிறது.

இதன் காரணமாக, பல வெளிநாட்டவர்கள் இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு ‘மருத்துவச் சுற்றுலா'வாக வருகிறார்கள். இங்கு அவர்கள் சட்டபூர்வமாக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்ளலாம் அல்லது கள்ளச் சந்தை மூலம் தேவையான உறுப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம். இரண்டுக்குமே ஒப்பீட்டளவில் செலவு குறைவு என்பதுதான், இங்குக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

‘உடல் உறுப்பு தானங்கள் எல்லாம் சட்டபூர்வமாகத்தானே நடைபெறுகின்றன. அதனால் என்ன பிரச்சினை?' என்ற கேள்வி வரலாம். சட்டபூர்வமாக்குவது இந்தத் தொழிலில் உள்ள வியாபாரிகளின் (மருத்துவர்கள், இடைத்தரகர்கள்) நோக்கத்தை மாற்றவில்லை. மாறாக, அவர்கள் செய்யும் கள்ளத்தனங்களை (வறுமையில் இருக்கும் ஒருவருக்குப் பணத்தாசை காட்டி அவரின் உடல் உறுப்புகளை விற்கச் செய்வது) சட்டபூர்வமாக்குகிறது.

165 ஆண்டு தொழில்

இந்தியாவில் இதுபோன்று உடல் உறுப்பு கடத்தல் பத்து அல்லது இருபது ஆண்டு காலமாகத்தான் நடைபெற்றுவருகிறது என்று நினைத்தால், அது பெருந்தவறு. இந்த விஷயம் 1850-லிருந்தே நம்மிடையே இருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனைக் கல்லூரிகளில், மாணவர்கள் பயிற்சி எடுத்துக்கொள்ள வைக்கப்பட்டிருக்கும் எலும்புக்கூடுகள் எல்லாம் இந்தியாவிலிருந்து ‘சப்ளை' செய்யப்பட்டவை. இதற்காக, இடுகாடுகளிலிருந்து புதைக்கப்பட்ட உடல்களையெல்லாம் தோண்டி எடுத்து, எலும்புகளை மட்டும் பிரித்தெடுக்கவே மேற்கு வங்கத்தில் அந்தக் காலத்தில் பல தொழிற்சாலைகள் இருந்திருக்கின்றன.

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பலருக்கும் தெரியாத விஷயங்கள்: - ஒருவருக்குத் தேவைப்படும் உறுப்பு, எங்கு, யாரிடமிருந்து, எப்படிப் பெறப்படுகிறது என்ற தகவல்கள் இல்லாததுதான்!

ஒருவருக்குத் தேவையான உறுப்பை இன்னொருவரிடமிருந்து வாங்கித் தரும் இடைத்தரகர்களை ஒழிக்க வெளிப்படைத் தன்மைதான் சரியான வழி. ஒருவருக்குச் சிறுநீரகங்கள் வேண்டும் என்பதற்காக, எங்கோ ஒரு நாட்டில், வறுமையில் உள்ள ஒருவர் கடத்தப்படுவதற்கோ அல்லது கொல்லப்படுவதற்கோ இதில் சாத்தியம் குறைவு.

பிசினஸ் போய்விடும்

ஆனால், ஒரு துர்பாக்கியம் என்ன தெரியுமா? உறுப்பு தானம் வேண்டுபவரும், உறுப்பு தானம் செய்பவரும் சந்தித்துக்கொள்ள நினைத்தாலும், பெரும்பாலான நேரங்களில் அதைத் தடுப்பது மருத்துவமனைகள்தான். ஏனென்றால், அப்படிச் செய்தால் அவர்களுடைய ‘பிசினஸ்' போய்விடுமே!

அப்படியே சந்திக்க வைத்தாலும், தானம் பெறுபவர் மற்றும் கொடுப்பவர் இரண்டு பேருமே பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாவார்கள் என்று சப்பைக் கட்டு கட்டுவார்கள். ஆனால் ஆய்வுகளின்படி பார்த்தால், இவ்வாறு சந்திக்க வைப்பது அறுவை சிகிச்சையின் ‘சக்சஸ் ரேட்'டை அதிகரிக்கச் செய்கின்றன என்பதுதான் உண்மை.

அறுவை சிகிச்சை தேவையா?

இவையெல்லா வற்றையும்விட இந்தப் புத்தகம் நமக்குத் தரும் முக்கியமான செய்தி, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையே தேவையில்லை என்பதுதான்.

ஒருவர் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டால், கூடுதலாகச் சில காலம் மட்டுமே வாழ முடியும். ஆனால் அறுவைசிகிச்சைக்குப் பிறகும் அவருக்கு வேறு பிரச்சினைகள் வரலாம். மாறாக, அறுவைசிகிச்சை செய்துகொள்ளாமல் மருந்து, மாத்திரைகளையே தொடரலாம்.

‘நாம் மரவுரி தரித்த காலத்தில் மனிதச் சதை மீது நமக்கிருந்த பசியைவிட, இந்தக் காலத்தில் அந்தப் பசி மிகவும் அதிகமாக இருக்கிறது' என்று சொல்லும் இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் 2011-ம் ஆண்டு ‘ஹஷெட் இந்தியா' பதிப்பகம் வெளியிட்டது. அந்தப் புத்தகம் சமீபத்தில் ‘சிவப்புச் சந்தை' என்ற தலைப்பில் தமிழில் அடையாளம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

‘உடல் உறுப்பு தானத்தால் இன்னொரு உயிரைக் காப்பாற்றலாம். ஆனால், உறுப்பு எப்படிக் கிடைத்தது என்று தெரியாத நிலையில் அப்படித் தானம் பெறாமல் இருப்பதன் மூலமும், இன்னொரு உயிரைக் காப்பாற்றலாம்' என்பதே இந்தப் புத்தகம் நமக்குத் தரும் ஞானம்!