தோல் நோய்களை குணப்படுத்தும் அருகம்புல்

தோல் நோய்களை குணப்படுத்தும் அருகம்புல் !

தோல் நோய்களை குணப்படுத்த கூடியதும், கண் எரிச்சல் வயிற்றுப்போக்கை சரிசெய்ய கூடியதும், புண்களை ஆற்ற வல்லதுமான அருகம்புல், வயல்வெளி, புல்வெளியில் வளரக் கூடியது அருகம்புல். எளிதில் கிடைக்க கூடிய அருகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இதன் மீது நடப்பதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது.

நரம்பு நாளங்களை தூண்டக் கூடியது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பசையாக அரைத்து எடுக்கவும். இந்த பசையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை பூசுவதால் அரிப்பு, சொரி சிரங்கு, படர்தாமரை, வியர்குரு சரியாகிறது. தோல் நோய்களுக்கு மருந்தாகும் அருகம்புல், அக்கி கொப்புளங்கள், சொரியா சிஸ்சை குணப்படுத்துகிறது.

அருகம்புல்லை கொண்டு கண்நோய்க்கான மருந்து தயாரிக்கலாம். அருகம்புல்லை துண்டுகளாக நறுக்கி நீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் வடிகட்டி ஊறல் நீரை மட்டும் எடுக்கவும். இதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து காலை, மாலை குடித்துவர கண் எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகும். அருகம்புல்லில் நீர்விடாமல் சாறு எடுக்கவும். இதை 2 சொட்டு விடும்போது மூக்கில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்.

அருகம்புல் சாறு 100 மில்லி அளவுக்கு குடித்துவர மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும். பல்வேறு நன்மைகளை கொண்ட அருகம்புல், ரத்தத்தை சுத்தப்படுத்தி தோல்நோய்கள் வராமல் தடுக்கிறது. கோடை வெயிலுக்கு அருகம்புல் சாறு குடிக்கும்போது உடல் குளிர்ச்சி அடையும். வெள்ளைப் போக்கு, வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். அருகம்புல் சாறு 50 மில்லி எடுக்கவும். இதனுடன் புளிப்பில்லாத கெட்டி தயிர் சேர்க்கவும்.

இதை காலை, மாலை குடித்துவர வயிற்றுபோக்கு, வெள்ளைப் போக்கு சரியாகும்.அருகம்புல்லை பயன்படுத்தி உடல் சூட்டை தணிக்க கூடிய, குடலில் ஏற்படும் புண்களை ஆற்றக் கூடிய மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அருகம்புல் சாறு, மிளகுப்பொடி, நெய். ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் நெய் விட்டு சூடுபடுத்தவும்.

இதனுடன் அருகம்புல் சாறு சேர்க்கவும். பின்னர், நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன் சிறிது மிளகுப்பொடி சேர்க்கவும். லேசாக கொதித்தவுடன் இறக்கி விடவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும். இது உடல் உஷ்ணத்தை குறைக்கும். வெட்டை நோய்க்கு மருந்தாகிறது.

வயிற்று புண்களை ஆற்றும். சிறுநீர் பெருக்கியாக விளங்குகிறது. கைகால் வீக்கத்தை போக்குகிறது.மருந்துகளை அதிகளவில் எடுத்துக் கொள்வதாலும், வெளியில் அடிக்கடி சாப்பிடுவதாலும் ஏற்படும் புண்களை அருகம்புல் சாறு ஆற்றும். எளிதில் நமக்கு கிடைக்க கூடிய அரும்கபுல் நோயற்ற வாழ்வுக்கு சிறந்தது.