உங்களுக்கு சிரிக்கத் தெரியுமா?

உங்களுக்கு சிரிக்கத் தெரியுமா?

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி “பேஸ்புக் என் உணர்ச்சிகளை மரத்துப்போகச் செய்வதுபோல உணர்ந்தேன், அதனால் என் கணக்கை டெலிட் செய்து, அதிலிருந்து விலகிவிட்டேன்” எனப் பகிரங்கமாகப் பேசியதை மிகுந்த ஆச்சரியம் ஏற்படுத்திய சம்பவமாகச் சொல்லலாம். அவர் சொல்வதைத்தான், இது தொடர்பாக நடந்த ஆராய்ச்சி முடிவுகளும் சொல்கின்றன. நடிகர் விஜய் சேதுபதி, சமூக வலைதளங்களின் பாதிப்புகளைக் குறித்து விளம்பரத் தூதராக நடித்தால், மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.

யார் உங்கள் ஆசிரியர்?

இணையதளம், பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதள பயன்பாடுகள் அதிகரித்த பின்னர் ‘ஆசிரியர் - மாணவர் உற'வில் மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுவருவதாக, சமீபத்தில் ஒரு கூட்டத்தில் நான் சந்தித்த பல கல்லூரிப் பேராசிரியர்கள் தெரிவித்தனர். கேள்வி கேட்டவுடன் இணையத்தில் தேடிப் பதிலைச் சொல்வது, வலைதளங்களில் உள்ள கருத்துகளைக் கூறி ஆசிரியர்களை மட்டம் தட்டுவது, வகுப்பு நேரத்தில் எந்தக் கவலையும் இன்றி சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது உட்பட பல எடுத்துக்காட்டுகளை இதற்குக் கூறலாம்.

சமீபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர், பேராசிரியை ஒருவர் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கும்போதே மொபைலில் போட்டோ எடுத்து வாட்ஸ்அப்பில் உலாவ விட்டிருக்கிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் கல்லூரி நிர்வாகம், இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என அந்த ஆசிரியையிடம் நிர்ப்பந்தித்ததுதான்.

அறிவா? தகவலா?

‘எல்லாம்தான் இணையதளத்தில் கிடைக்கிறதே, எதற்கு வகுப்பில் ஆசிரியர் சொல்வதைக் கவனிக்க வேண்டும்?’ என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் பரவலாகி இருக்கிறது. சமூக வலைதளங்களின் மூலமாகத் தற்போது எல்லாரும் எல்லா விஷயங்களையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்திருப்பது ஒரு வரப்பிரசாதம்தான். ஆனால், எல்லா நேரத்திலும் அது அறிவுசார்ந்த (Knowledge) விஷயமாக இருக்க முடியாது. மாறாகத் தகவல் சார்ந்த (Information) விஷயமாக மட்டும் இருந்தால், பல சமூகச் சிக்கல்கள் ஏற்படும்.

உதாரணமாக ‘மெட்பார்மின்’ என்ற நீரிழிவு நோய்க்கான மாத்திரையை எடுத்துக்கொள்வோம். அது நீரிழிவு நோய்க்கான மாத்திரை என்பதை வலைதளங்களின் மூலமாக அறிந்துகொண்டால், அது ஒரு தகவல் சார்ந்த விஷயம். அதே மாத்திரை மருத்துவத் துறையில் உடல் பருமனைக் குறைக்கவும், கருத்தரிப்பின்மை பிரச்சினை (PCOD) உட்பட இன்னும் பல நோய்களுக்கும் பயன்படுத்தப்படும் என்பது பற்றி பலருக்கும் தெரியாது. இது அறிவுசார்ந்த விஷயம்.

இதைப் புரிந்துகொள்ள இயலாத ஒரு நோயாளி, குழந்தையின்மைக்கு டாக்டர் சுகர் மாத்திரையைத் தவறாகக் கொடுத்துவிட்டார் என்ற செய்தியைப் பரப்பினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தத் தவறான அணுகுமுறை மருத்துவத் துறையை மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் ஏதோ ஒருவிதத்தில் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பது உண்மை. இப்படி வலைதளத்தைத் தேடிப் பார்த்து, தங்கள் நோய் அறிகுறிகளை ஒப்பிட்டுப் பார்ப்பதே மனநலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றுதான்.

புதைக்கப்படும் உணர்ச்சிகள்

விதம்விதமாக ஸ்மைலி பயன்படுத்தும் பலருடைய முகங்களில் உண்மையான புன்முறுவலைப் பார்ப்பதே அரிதாகிவருகிறது. சமூகம் உருவாவதே ஒவ்வொரு தனிமனிதரிடமும் இருந்துதான். ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் பேசிக்கொள்வது, முகபாவங்கள், உடல் பாவனைகள் மூலம் நாம் சொல்லவருவதைப் பிறருக்கு உணர்த்துவது, பதிலுக்குப் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்வதுதான் சமூகப் பழக்கவழக்கத்தின் அடிப்படை.

ஆனால் நமது சந்தோஷங்கள், துக்கங்களின் வெளிப்பாட்டை ‘OMG', ‘LOL', ‘RIP' என்று சுருக்கிவிட்ட இந்தக் குறுஞ்செய்தி உலகத்துக்குச் சமூக வலைதளம் என்று பெயர் வைத்தது மிகப் பெரிய நகைமுரண்! அதிலேயே புழங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகளின் சமூகப் பழக்கவழக்கங்கள் மாறிவருவதாகவும், பிறருடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மை மழுங்கி வருவதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

படிப்பிலும் பாதிப்பு

இணையதளத்தில் இருக்கும் நேரத்தைக் கட்டுப்பாட்டோடு வைக்க முடியாததால்தான், வளர்இளம் பருவத்தினரின் படிப்பு பாதிக்கப்பட ஆரம்பிக்கிறது. படிக்க வேண்டிய நேரத்தை இணையதளம் மற்றும் மொபைல்போன் தின்றுவிடுவதால் சில முறை முதல் மதிப்பெண் வாங்கிய மாணவர்கூடத் தேர்வில் தோல்வியைத் தழுவ நேரிடலாம். எப்போதும் கடந்தகால வாட்ஸ்அப், பேஸ்புக் பதிவுகளைக் குறித்த எண்ணங்கள் அடிக்கடி தோன்றிக் கவனச்சிதறலை ஏற்படுத்துவது, படிப்பை மேலும் பாதிக்கும். தொடர்ந்து இணையதளத்தைப் பயன்படுத்தும் மாணவர்களின் ஞாபகத்திறன் குறைய வாய்ப்புள்ளதாக (Digital Dementia), சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இணைய அடிமைத்தனம் என்ன காரணம்?

வளர்இளம் பருவத்தில் “நீ படிப்பதற்கு மட்டும் நேர்ந்துவிடப்பட்டிருக்கிறாய்” என்கிற அளவுக்குப் பெற்றோரின் கனவுகள் குழந்தைகளின்மீது திணிக்கப்படும்போது, அதை ஆரோக்கியமாகக் கையாளத் தெரிந்தவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். ஆனால் மன அழுத்தம் மற்றும் தோல்வியால் பாதிக்கப்படும் சிறுவர்களுக்கு வலைதள உலகம் சிவப்புக் கம்பளம் விரித்த கனவு உலகம் போலக் காட்சியளிப்பதற்குப் பின்வரும் காரணங்கள் உண்டு:

# வளர்இளம் பருவத்தினருக்குத் தங்களுடைய மன அழுத்தம் மற்றும் கவலைகளை மறக்க உதவும் மருந்தாக இணையதளம் மற்றும் ஸ்மார்ட்போன் மாறிவிடுகிறது.

# அதிக எதிர்பார்ப்பைத் திணிக்கும் நிஜ உலகத்திலிருந்தும் தோல்விகளிலிருந்தும் தப்பித்துக்கொள்ள ஒரு வழியாக இணையதளம் பயன்படுகிறது.

# முகம் பார்த்துப் பேசத் தேவையில்லாத இணையதள உலகத்தில், அவர்களுடைய கூச்ச உணர்வை மீறி எல்லோரிடமும் சகஜமாகக் குறுந்தகவல்கள் மூலம் எல்லாக் கருத்துகளையும் பரிமாறும் மேடையாகிறது.

# நிஜ உலகத்தில் கவனிக்கப்படாத ஒரு நபர், இணையதள உலகத்தில் முக்கிய நபராக மாறிவிட வாய்ப்புள்ளது. பலரின் லைக்குகளையும் பாராட்டையும் அள்ளலாம்.