கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆயுர்வேத மருத்துவம்

கொலஸ்ட்ராலை குறைக்கும் ஆயுர்வேத மருத்துவம் !

கொலஸ்ட்ரால் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன.தயிர் அதிக அளவில் சேர்ப்பது, ஆடு, கோழி முதலியவற்றின் மாமிசம் கலந்த உணவு அளவில் அதிகமாதல், பகல் தூக்கம், சோம்பல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.அறுவடையாகி நாளாகாத புதுத் தானியங்களாலான உணவு, சர்க்கரை, கற்கண்டு, வெல்லப்பாகு இவை அதிகம் சேர்ந்த உணவுகளும் கொழுப்படைப்பிற்குக் காரணமாகலாம்.பாகலிலை, பாகற்காய், வேப்பிலை, வேப்பம்பூ, வெந்தயக்கீரை, நாவலிலை, கோவைக்காய் முதலிய கசப்பும் துவர்ப்பும் மிக்க இலைகளும் காய்களும் தொடர்ந்து உபயோகித்தவை. இலைகளைத் துவையலாகவும் கசக்கிப் பிழிந்தெடுத்த சாறாகவும் பயன்படுத்தலாம். காய்களை வதக்கிச் சாப்பிடலாம்.பச்சைப் பயறு, கொள்ளு ஆகியவற்றைத் தண்ணீரில் கொதிக்கவிட்டுக் கஞ்சியாக்கி, ஆறிய பிறகு சிறிது தேன் கலந்து காலை உணவாகக் கொள்ளலாம்.நடைப்பயிற்சி மிக அவசியமானது. காலையில் மலம், சிறுநீர் கழித்த பிறகு வெறும் வயிற்றில் 1 மணி நேரம் வரை வேகநடை நடப்பது நலம் தரும். மருந்துகளில் வரணாதி கஷாயம்,புனர்நவாதி கஷாயம் , காஞ்சனாரகுக்குலு நல்ல பலனைத் தரும். ஒன்றரை ஸ்பூன் வீதம் கஷாயம் , 12 ஸ்பூன் வெந்நீர் , ஒரு மாத்திரை காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிடவும்.

லோத்ராஸவம் 6 ஸ்பூன் அளவு காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிடவும். அல்சர் நோயாளிகள் இம்மருந்துகளைச் சாப்பிட வேண்டாம். மேற்கூறிய உணவு வகைகள் மற்றும் நடைப்பயிற்சி மட்டும் கடைப்பிடிக்கவும்.அதிக வெயில் காரணமாக ஏற்படும் தலைசுற்றல், தொண்டை வறட்சி ஆகியவற்றைத் தவிர்ப்பது எப்படி? கோடையில் ஏற்படும் இயற்கையான உடல் மாறுதல்களில் உடலில் நீர் வற்றுவதும் ஒன்று. இவ்வறட்சியைப் போக்க இயற்கை அளிக்கம் அருமருந்து இளநீர், பனை நுங்கு, முலாம்பழம், வெள்ளரிப் பழம், வெள்ளரிப் பிஞ்சு, கக்கரி முதலியவை. நாமே செயற்கையாகச் செய்துகொள்ளும் உபாயங்கள், குளிர்பதனம், விளாமிச்சை, வெட்டிவேர் போட்ட பானை நீர், நனைந்த விளாமிச்சைத் தட்டியாலான மறைப்பு முதலியவை.

இளநீர், பனை நுங்கு, முலாம்பழம் போனற்வற்றைப் பகல் உணவுக்குப் பின் ஓரிரு மணி நேரம் கழித்துச் சாப்பிடுவது நல்லது. காலை வேளையிலும் நல்ல பசி வேளையிலும் இரைப்பை உணவை எதிர்பார்த்துக் கதகதப்புடன் இருக்கும். அப்போது குளிர்ச்சி நிறைந்த இள நீர் முதலியவை நேரிடையாகச் சேரும்போது பித்தமும் குளிர்ச்சியும் கலப்பதன் காரணமாகப் பசி மந்தம், புளித்த ஏப்பம்,வயிற்றில் வேக்காளம், பேதி, தலைச்சுற்றல் முதலியவை ஏற்படக் கூடும். பழுக்கச் காய்ச்சிய இரும்புச் சட்டியில் தெளித்த குளிர்ந்த நீர் சட்டி உடையைக் காரணமாவது போல, வயிற்றிலுள்ள அழற்சி நீங்க உதவக் கூடியவைகூட கதகதப்பாயுள்ள குடலில் சேரும் போது வேக்காளத்தைத் தருகின்றன. வெயிலில் அலைந்து திரும்பியவுடன் வியர்வையும் தாகமும் அடங்கச் சிறிது நேரம் ஓய்வெடுத்து, கைகால்கள் அலம்பி, வாய் கொப்பளித்துப் பின் இவற்றை அளவு மீறாமல் சாப்பிடுவதே சரியான முறை.

தலைச்சுற்றல், தொண்டை வறட்சி நீங்க இளநீரை எடுத்தவுடன் சாப்பிட வேண்டும். தாமதிக்கக்கூடாது. இளம் பனை நுங்குதான் நல்லது. முற்றியது ஜீரணமாகாது. வயிற்று வலி, தலைச்சுற்றல், வாந்தி ஏற்படுத்தும். இந்நிலையில் இஞ்சியும், உப்பும் சேர்த்துச் சுவைத்து மேல் மோர் சாப்பிட, பித்த வேதனை குறையும். வெள்ளரிப் பிஞ்சுடன் மிளகும் உப்பும் சேர்த்தால் அதன் குளிர்ச்சி குடலைப் பாதிக்காது. வெயிலிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் வியர்வை அடங்காமல் குளிர்ந்த நீரில் குளித்தால் சளி பிடிக்கும். உடல் கனக்கும். உடல் சூடு குறைந்து குளிக்கும் போது இளம் பனைநுங்கை மேல் தோல் நீக்கி உடலின் மேல் தேய்த்துக் குளிக்க, தோல் எரிச்சல், கடைக்கட்டி, அரிப்பு, வியர்க்குரு முதலியவை மறையும். தோல் வழவழப்பும் மென்மையும் பெறும்.

கோடைக்காலத்தில் மலச்சிக்கல் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். விடியற்காலை வேளையில் நீராகாரத்தை உப்பும் சீரகத் தூளும் சேர்த்துச் சாப்பிடுவதால் மலச் சிக்கல் இல்லாதிருக்கும். கோடைக்காலத்தில் நாவறட்சிக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் போதாது. வயிறு உப்புமே தவிர நாவறட்சி அடங்காது. விளாமிச்சை வேர் போட்டு ஊறியபானைத் தண்ணீரைச் சிறிது சிறிதாக ருசித்துப் பருகுவதும், அடிக்கடி வாயில் தண்ணீர் விட்டுக் கொப்பளிப்பதும், கை, கால், முகம் தண்ணீர் விட்டு அலம்பிக் கொள்வதும் நல்லது.நாவறட்சியை ஏற்படுத்தும் மாப்பண்டம், எண்ணெயில் பொரித்தவை, காரம், புளிப்பு, உப்புச்சுவை, மசாலா, கேழ்வரகு, கொள்ளு, தயிர், காரசாரமான மாமிசம் போன்றவை தவிர்த்து இனிப்புச்சுவை, உளுந்து, பயறு, கோதுமை, அரிசி, கிழங்குகள், காய்கள், கீரைகள், பழங்களில் மா, பலா, திராட்சை, வாழைப்பழம் நல்லது. கரும்பு, தயிரில் வெல்லமும் நெல்லிக்காயும் சேர்த்தல், எருமைப்பால், பாலாடை, திரட்டிப்பால் ஆகியவை நல்லது. ஐஸ் கலந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும்