வெப்பம் தணிக்கும் இரட்டையர்கள்

வெப்பம் தணிக்கும் இரட்டையர்கள்...!!!

இன்றைக்குக் குளிர்பானம் என்ற பெயரில் கலர் கலராகச் செயற்கை பானங்கள் நம் முன்னே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கின்றன. இவை நம் உடல்நலத்தை வறட்சியாக்குவது மட்டுமன்றி, நாம் வாழும் நிலத்தையும் வறளச் செய்கின்றன. இந்தச் செயற்கை குளிர்பானங்களைத் தவிர்த்தாக வேண்டும்.

தண்ணீரைவிடவும் சிறப்பாகத் தாகம் தணித்த இயற்கை தந்த கொடையான இளநீர்தான், அக்கால முதன்மைக் குளிர்பானம். வெயில் காலத்துக்கு ஏற்ற, பல நோய்களைப் போக்கும் தன்மை கொண்ட இளநீரையும் நுங்கையும் கோடை முழுவதும் உட்கொள்வது சிறந்தது.

சத்துக் களஞ்சியம்

கேளி இளநீர், அடுக்கிளநீர், செவ்விளநீர், கருவிளநீர், மஞ்சள் கச்சி, ஆயிரங்கச்சி, குண்டற்கச்சி எனப் பல வகையான இளநீர் பற்றிய பாடல் குறிப்புகள் உள்ளன. ஒவ்வொரு வகையான இளநீருக்கும் உள்ள சிறப்பு மருத்துவக் குணங்களைப் பற்றி சித்த மருத்துவப் பாடல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தற்போது பச்சை இளநீர், செவ்விளநீர் போன்றவையே அதிகம் கிடைக்கின்றன.

கால்சியம், தாமிரம், குளோரைடு, இரும்புச் சத்து, மக்னீசியம் போன்ற தாதுப் பொருட்களும், தையமின், ரிபோஃபுளோவின், பைரிடாக்ஸின் ஆகிய வைட்டமின்களும், சோடியம், பொட்டாஷியம் போன்ற தாது உப்புகளும் இளநீரில் கரைந்து கிடக்கின்றன. இளநீரில் உள்ள பொட்டாஷியமும் சோடியமும் கைகோத்து, வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் நீரிழப்பை (Dehydration) ஈடுசெய்ய உதவுகின்றன. செரிமானம், வளர்சிதை மாற்றத்தைத் துரிதப்படுத்தும் என்சைம்களும் இளநீரில் உள்ளன. உயர் ரத்தஅழுத்த நோயாளிகளுக்கு இளநீர் உதவும் என்று ஆய்வுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. இளநீரில் கிடைக்கும் சத்துப் பொருட்களின் எண்ணிக்கையும் அளவும், முற்றிய தேங்காய் நீரில் குறைந்துவிடுவதைக் கவனிக்க வேண்டும்.

செவ்விளநீர்: சிவப்பு இளநீர், கர்ப்பிணிகளுக்குச் சிறந்தது. தாகம், அதி வெப்பம், களைப்பு போன்றவற்றைப் போக்கும் தன்மை இதற்கு அதிகம். விந்து எண்ணிக்கையைப் பெருக்கும். பச்சை இளநீரைவிட செவ்விளநீருக்குக் குளிர்ச்சித் தன்மை சற்றே அதிகம்.

வரலாற்றில் இளநீர்

நீரிழப்பு ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக ஆற்றலைக் கொடுக்க இளநீரை அக்கால மக்கள் பயன்படுத்தியுள்ளனர். சோழர்கள் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இலவச மருத்துவச் சாலைகளில், நோயாளிகள் அனைவருக்கும் தினமும் இளநீர் வழங்கப்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. இளநீரின் மருத்துவச் சிறப்பைப் போற்றும் வகையில் மங்கல நிகழ்ச்சிகளின்போதும், போர், விழாக்களின் போதும் அனைத்து வீடுகளின் முன்பும் செவ்விளநீர்க் குலைகளை நம் மூதாதையர் இடம்பெறச் செய்தனர்.

இளமை தரும்

எப்போதும் இளமையாக இருக்க விரும்புபவர்கள், இளநீரை அதிகம் அருந்தலாம். இதிலுள்ள `கைனெடின்’(kinetin) தோல் சுருக்கங்களைக் குறைப்பதுடன், செல் செயல்பாடுகளைச் சிறப்பாக்கி முதுமையைத் தள்ளிப்போட உதவுகிறது. செல்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து, இளமையைத் தக்கவைக்க உதவும் எதிர்-ஆக்ஸிகரண (Anti-oxidants) பொருட்களும் இளநீரில் அதிகம். புற்றுநோயின் ஆதிக்கத்தைக் குறைக்கும் திறன் இளநீருக்கு உண்டு.

எப்போது அருந்துவது?

உணவுக்கு முன்பு இளநீர் அருந்துவதால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கும் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. வெறும் வயிற்றில் இளநீரைப் பருகினால், வயிற்றுப் புண் உண்டாவதுடன், பசியும் மந்தப்படும் என்கிறது பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பதார்த்தக் குணச் சிந்தாமணி பாடல் ஒன்று. எனவே, உணவுக்குப் பின் சிறிது நேரம் இடைவெளி விட்டுப் பருகினால், நல்ல பசி உண்டாவதோடு, வாத, பித்தத்தைக் குறைக்கும் பலனும் கிடைக்குமாம். மலம் சிக்கலின்றி வெளியேறி, தேகமும் பொலிவு பெறும். அதனால் உணவுக்குப் பின் இளநீரைப் பருகுவதே நல்லது.

இளநீர் வழுக்கை:

இளநீரைத் தேக்கி வைத்து, இளநீரோடு உறவாடும் வழுக்கைக்கும் குளிர்ச்சியுண்டாக்கும், சிறுநீரை அதிகரிக்கும் குணம் உண்டு. செரிமானப் பாதையில் உள்ள புண்களைக் குணப்படுத்தவும் செய்யும்.

மருந்துகளின் ஆதாரம்:

சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் கண் மருந்துகள் மற்றும் வயிற்றுப் புண்ணைக் குறைக்கும் மருந்துகளைச் செய்ய இளநீர் முக்கியப் பொருளாகப் பயன் படுத்தப்படுகிறது. சில மருந்துகளைச் சுத்தி செய்யும் (Purification process) திறனும் இளநீருக்கு உண்டு.

கலாச்சார சின்னம் ‘நுங்கு’

கிராமங்களில் நுங்கு வண்டிகள் மூலமாகச் சிறார்களிடம் அறிமுகமாகும் பனை நுங்கு, பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது. தமிழகத்தின் மாநில மரமாக, கலாச்சாரச் சின்னமாக விளங்கும் பனை மரத்திலிருந்து கிடைக்கும் அருமையான உணவுப் பண்டம் நுங்கு. சுமார் 1,100 ஆண்டுகளுக்கு முன் சோழ நாட்டின் சில சிற்றரசர்களின் முத்திரை அடையாளமாகப் பனை இருந்துள்ளது.

நீர்ச்சத்து நிறைந்து, தாகத்தைத் தணிக்க உதவும் நுங்கு, உடலுக்குத் தேவையான குளிர்ச்சியைத் தரக்கூடியது. கழிச்சலைக் குணமாக்க நுங்கை அதன் தோலுடன் சேர்த்துச் சாப்பிடலாம். தோலில் உள்ள துவர்ப்புச் சுவை, வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்த உதவிபுரியும். பசித்தீயைத் தூண்டி, சிறுநீர் பெருக்கி, அழலை ஆற்றும் செய்கைகள் இதற்கு உண்டு. வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு இது சிறந்த வலி நிவாரணியாகச் செயல்படுகிறது. `அக்கரம்’ எனப்படும் வாய்ப் புண்ணுக்கும் நுங்கு சிறந்த மருந்து.

சத்துகளின் சாரம்

அகத்தைக் குளிரச் செய்து, முகத்தையும் குளிரச் செய்யும் தன்மை கொண்டது நுங்கு. வெயில் காலத்தில் உண்டாகும் வேனல் கட்டிகளுக்கும் வேர்க்குருக்களுக்கும், நுங்குச் சாறு மற்றும் அதன் தோல் பகுதியைத் தடவிவந்தால் விரைவாக நிவாரணம் கிடைக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் முகக் களைப்பைப் போக்க, நுங்கு நீரை முகத்தில் தடவிவந்தால் முகம் பொலிவடையும்.

நிலத்தடி நீர் ஆதாரத்தை வளமைப் படுத்த உதவும் பனைமரம்போல, பனை மரத்தின் குழந்தையான நுங்கு மனித உடலின் நீர் ஆதாரத்தை வளமைப்படுத்தும். சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், துத்தநாகம், வைட்டமின் போன்ற சத்துகள் நுங்கில் அதிகம் உள்ளன. முதிர்ந்த நுங்கைச் சாப்பிடுவதால் வயிற்று வலி வரும் என்பதால், அதைத் தவிர்க்க வேண்டும்.

கலப்படத்துக்கு வாய்ப்பில்லை

செயற்கைக் குளிர்பானங்களில் நச்சுகள் கலந்திருப்பதைப்போல, இயற்கையின் வரமான இளநீரிலும் நுங்கிலும் கலப்படம் செய்ய முடியாது என்பதால், இவற்றை நம்பிக் குடிக்கலாம். `தென்னையும் பனையும்’ நம்முடைய வாழ்வோடும் உணர்வோடும் நெடுங்காலமாக இணைந்து பயணம் செய்யும் இரட்டைச் சகோதரர்கள். இந்தக் கோடையைச் சமாளிக்க இவற்றைத் துணை கொள்வோம்.