வெற்றிலை எதற்கெல்லாம் உபயோகிக்கலாம் என தெரியுமா?

வெற்றிலை எதற்கெல்லாம் உபயோகிக்கலாம் என தெரியுமா?

அந்த காலத்தில், வெற்றிலை பாக்கு போடாமல், விருந்து என்பது முழுமையாய் முடியாது. இன்று தாம்பூலங்களில் வைத்து கொடுப்பதோடு சரி, யாரும் அதனை விரும்புவதில்லை.
பற்களில் கரையாகும். சிவக்கிறது என யாருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் அந்த காலத்தில் நம் தாத்தா, பாட்டி செய்ததில் ஒரு அர்த்தம் இருக்கிறது. எவ்வளவு ‘பலமாக’ நீங்கள் சாப்பிட்டு இருந்தாலும், வெற்றிலை, எளிதில் ஜீரணப்படுத்தி விடும்.

வெற்றிலை வேறு எவற்றிற்கெல்லாம் நம் தாத்தாக்கள் பயன்படுத்தினார்கள் என்று பார்ப்போமா?
ஆஸ்துமா-வறட்டு இருமல் : அலர்ஜியினால் ஏற்படும் வறட்டு இருமல் சிலருக்கு மாதக் கணக்கில் இருக்கும். ஆஸ்துமாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். இரவின் சரியான தூக்கம் இல்லாமல் என்ன செய்தாலும், நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் கவலைப் படாதீர்கள். எளிய தீர்வு கைவசம் உள்ளது.
சித்த மருந்து கடைகளில் சுவாசகுடோரி என்ற வில்லைகள் கிடைக்கும். அதனை வாங்கி தினமும் இரு வில்லைகளுடன், இரு மிளகினை சேர்த்து, வெற்றிலைக்குள் வைத்து, மடித்து, மெல்லுங்கள். அதன் சாறினை முழுங்க வேண்டும். இப்படி காலை மாலை என்று இரு வேளை மென்றால், படிப்படியாக குணம் கிடைக்கும். அலர்ஜி சுத்தமாக நின்று விடும்.
தீக்காயங்கள் குணமாக : தீக்காயங்கள் தரும் எரிச்சலை சொல்லி மாளாது. சீக்கிரம் ஆறவும் செய்யாது. இந்த மாதிரியான நேரத்தில், வெற்றிலையை நெய்யில் வதக்கி, தீக்காயத்தின் மேல் பற்றாக போடுங்கள். விரைவில் ஆறிவிடும்.
நுரையீரல் பிரச்சனைகளுக்கு : நுரையீரலை பலப்படுத்தும் சக்தியை வெற்றிலைக் கொண்டுள்ளது. வெற்றிலைச் சாறு மற்றும் இஞ்சிச் சாறு, இரண்டையும் சம அளவு கலந்து கொண்டு, தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 ஸ்பூன் குடித்தால், நுரையீரல் பிரச்சனைகள் உங்களை நெருங்காது. சுவாசக் குழாய் சுத்தமாகும்.
பூச்சிக் கடிக்கு : எந்த பூச்சி கடித்ததென்று தெரியாமல் போனால், அதனால் ஏற்படும் அலர்ஜியை தடுக்க, நடு நரம்பு நீக்கிய வெற்றிலையுடன் 3 மிளகினை சேர்த்து நன்றாக மென்று, அதன் சாற்றினை முழுங்குங்கள். கடியின் விஷம் எளிதில் இறங்கும்.
சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தும் : சர்க்கரை அளவினை, மாத்திரை மருந்துகளைக் கொண்டு, கட்டுப்படுத்த வேண்டுமென்பதில்லை. இயற்கையான எளிய முறைகளை உபயோகப்படுத்தலாம். வெற்றிலைக் கொண்டு செய்யப்படும் இந்த மருந்தினை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
தேவையானவை :
வெற்றிலை – 4
வேப்பிலை – ஒரு கைப்பிடி
அருகம் புல் – ஒரு கைப்பிடி மேலே சொன்னவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இவற்றை, அரை லிட்டர் நீரில் போட்டு நன்றாக கொதிக்கவிடுங்கள்.
நீர், கால் லிட்டர் வரை சுண்டியவுடன், அடுப்பை அணைத்து, ஆறியவுடன் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் மூன்று வேளை உணவு சாப்பிட்ட பின் , 50 மி.லி. குடித்து வந்தால், சர்க்கரை அளவு குறைந்து சீராகும்.
தலைவலி நீங்க :
வெற்றிலை சாறினை எடுத்துக் கொண்டு, அதில் கற்பூரத்தை பொடி செய்து நன்றாக குழையுங்கள். இதனை நெற்றியில் பத்து போட்டால், தலைவலி சரியாகிவிடும். மைக்ரைன் இருந்தாலும் இதனை தொடர்ந்து உபயோகிக்கும் போது, தலைவலி குறைந்து விடும்.