மாதவிலக்கு நிற்கும்போது ஏற்படும் தொந்தரவு

மெனோபாஸ் தொந்தரவுகளுக்கு பாட்டி வைத்தியம் !
(மாதவிலக்கு நிற்கும்போது ஏற்படும் தொந்தரவுகளுக்கு)

“ இது என் அக்கா... பாட்டி... இதுக்கு இப்ப மூட்டுக்கு மூட்டு வலிக்குதாம்... எதையோ பறிகொடுத்தாப்புலயே இருக்கு... மனசு நிம்மதியில்லேங்குது... சரியா சாப்பிட முடியலயாம்... தூக்கம் வரலையின்னு புலம்புது பாட்டி... ஏதாவது மருந்து சொல்லு பாட்டி...” என்று கெஞ்சலாக கேட்டாள் நாச்சம்மை.

பாட்டி நாச்சம்மையுடன் வந்திருந்த பெண்ணை கூர்ந்து கவனித்தாள்.

“வயசு நாப்பத தாண்டிருச்சாடியம்மா...” என்று கேட்டாள்.

அதற்கு அந்த பெண் “ஆமா...” என்று தலையாட்டினாள்.

“அப்ப மாத விலக்கு நின்னுருச்சா...” என்று பாட்டி அடுத்த கேள்வியைக் கேட்டாள். அதற்கும் அந்தப் பெண் ஆம் என்றே பதிலளித்தாள்.

“ஏண்டியம்மா... நாற்பது வருஷம் ஒழச்ச கர்ப்பப்பை ஓய்வெடுக்க ஆரம்பிக்கிறப்ப இந்தமாதிரியான சின்ன சின்ன தொந்தரவுக இருக்கத்தான் செய்யும்... இதெல்லாம் இயற்கையா எல்லா பொம்பளைகளுக்கும் வரதுதானடியாத்தா... ஒடம்பு முதுமையோட வாசல்ல காலடி எடுத்து வைக்கிற நேரம்... குடும்பப் பிரச்சனையோ உச்ச கட்டத்துல இருக்கும்... ஒடம்பு ஒத்துழைக்காது... மனமும் சோர ஆரம்பிச்சுரும்...”

“இப்பத்தான் நாம சாப்பாட்டுல ரொம்ப கவனம் செலுத்தனும்.. தவறாம எண்ண தேச்சி குளிக்கணும்... மனச ரொம்ப அலக்கழிக்கக் கூடாது...”

“ஒங்களுக்கு எந்த வேலைய செஞ்சா மனசு சந்தோசமா இருக்கோ அந்த வேலைய செய்யணும்.... அப்போ மனசு அதுல லயிச்சி மத்த பிரச்சனை யெல்லாம் மறந்து போயிரும்...”

“மனச தெளிவா வச்சிக்க... ஒன்னச் சுத்தி இருக்குறவுகளையும் அப்படி வச்சிக்கிறமாதிரி பாத்துக்க....”

இப்ப நாஞ்சொல்ற மருந்த கேட்டுக்க...

கொத்தமல்லி விதை - 5 கிராம்

கறிவேப்பிலை - 5 கிராம்

மணத்தக்காளி கீரை - 5 கிராம்

தண்டுக்கீரை - 5 கிராம்

முடக்கற்றான் கீரை - 5 கிராம்

மிளகு - 5

இது எல்லாத்தையும் எடுத்து ஒண்ணா சேத்து ரெண்டு கொவள தண்ணி ஊத்தி கொதிக்க வச்சி சூப்பு மாதிரி செஞ்சி சாப்புடு...

இதுமாதிரி தெனமும் ஒருவேள செஞ்சி சாப்பிட்டு வந்தா இந்த வலியெல்லாம் போயிடும்..

இன்னொரு மருந்தும் சொல்றேன்...

நாட்டுமருந்து கடையில கெடைக்கிற

அதிமதுரம் - 5 கிராம்

சீரகம் - 5 கிராம்

சடமாஞ்சி - 5 கிராம்

வில்வ வேர் (பட்டை நீங்கலாக) - 5 கிராம்

குறுந்தட்டி வேர் - 5 கிராம்

மீரா - 5 கிராம்

கொம்பரக்கு - 5 கிராம்

இது எல்லாத்தையும் காயவச்சி, ஒண்ணா சேத்து இடிச்சி வச்சிக்கிட்டு, ஒரு கொவள தண்ணில 1 தேக்கரண்டி இந்த பொடியப் போட்டு கசாயம் செஞ்சி சாப்பிடு . இத தெனமும் 1 வேள 10 நாளைக்கி காலயிலயோ இல்லாட்டி சாயந்தரமோ சாப்பிட்டுக்கிட்டு வந்தா எந்த வலியும் ஒன்ன நெருங்காது... இது என்னோட அனுபவ வைத்தியம்..

“இதப்பாருடியம்மா...மொத்தத்துல நாற்பதுங்கறது பொண்டுகளுக்கு வாழ்க்கையோட அடுத்த கட்டம்... அத பக்குவமா கையாளத் தெரியணும்...”

என்று பாட்டி மருந்தோடு அறிவுறையையும் கூறி அனுப்பி வைத்தாள்.

“என்னதான் பாட்டி பவிசு பண்ணினாலும், பழமையும், புதுமையும் நெறைஞ்ச பொக்கிஷம் மாதிரிதான்... அனுபவத்துல அது சொல்றத எந்த பல்கலைக் கழகமும் சொல்லித்தர முடியாது....” என்று சொல்லியபடியே, அக்காளை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள் நாச்சம்மை.